தனிமைப்படுத்தப்பட்டாரா கமல்: நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை

சென்னை : கொரோனா வைரசில் இருந்து எங்களை காக்க தனிமைப்படுத்தி கொண்டோம் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, அந்த நோட்டீசை அகற்றிய சென்னை மாநகராட்சி, இந்த விவகாரத்தில் தவறு நடந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து சமீபத்தில், வெளிநாடு திரும்பியவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீட்டில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல் வீட்டிலும் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில், கொரோனாவில் இருந்து எங்களையும் சென்னையையும் காக்க நாங்கள் வீட்டிற்குள் தனிமைபடுத்தி கொண்டுள்ளோம் என்ற வாசகத்துடன் 10.3.2020 முதல் 06.04.2020 வரை தனிமைப்படுத்தி கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முகவரியில் கமல் பெயர் மற்றும் வீட்டு முகவரி இடம்பெற்றிருந்தது. ஆனால், எத்தனை பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலுக்கு தெரியாமலேயே அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மக்கள் நீதி மையம் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நோட்டீஸ் அகற்றப்பட்டது.

இது தொடர்பாக விளக்கமளித்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்ற வந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட் முகவரியை கொண்டு கமல்ஹாசனின் பழைய முகவரியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கொரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறுகையில், கமல் வீட்டில் சிறிய தவறு நடந்துவிட்டது. இனிமேல், இதுபோன்ற நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.