சென்னை: கொரோனாவின் பாதிப்புகள் குறித்து அரசின் நடவடிக்கை, தற்போதைய நிலையை குறித்து விவாதிப்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென முதல்வர் பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவம், பால், காய்கறி, மளிகை கடைகள், பத்திரிகை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் தமிழகத்தில் 50பேர் பாதிப்படைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். சமூகப் பரவலாக மாறிவிடாமல் தடுப்பதற்காக, மத்திய மாநில அரசுகளின் உள்ளாட்சி, சுகாதாரம், சுகாதராப் பணியாளர்கள் காவல்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியுள்ளதாவது: "கொரோனா பாதிப்பு குறித்த தற்போதைய நிலை, அதற்கான நடவடிக்கைகள், மற்றும் உண்மை நிலையை அறிவதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்தை காணொலி மூலமாக கூட்டவேண்டும். கொரோனா பாதிப்பால் தொழிலாளர்கள், வருமானத்தை இழந்துள்ளனர். மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மக்களுக்கு இந்நோய் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் மற்ற கட்சிகளுடன் இணைந்து ஒரே நோக்கத்தோடு ஒற்றுமையுடன் பணியாற்றினால் தான் கொரோனாவை விரட்ட முடியும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.